புதுச்சேரி: பாஜக நியமன சட்டப்பேரவை உறுப்பினராகத் தங்க விக்ரமன் பதவியேற்றார்.
இதன்மூலம் புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் பலம் 14ஆக உயர்ந்துள்ளது. முன்னாள் நியமன சட்டப்பேரவை உறுப்பினர் சங்கரின் மறைவு, காங்கிரஸ் அமைச்சராக இருந்த ஆ. நமச்சிவாயம், ஊசுடு தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது பதவிகளை விட்டு விலகியதால், ஆளும் காங்கிரஸ் பலம் 16 ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் 13 ஆகவும் இருந்தது.
இவ்வேளையில், பாஜகவைச் சேர்ந்த தங்க விக்ரமனை நியமன உறுப்பினராக மத்திய உள் துறை அமைச்சகம் நியமனம்செய்தது. இதற்கு முதலமைச்சர் வே. நாராயணசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஏற்கனவே 3 நியமன உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க அப்போதைய சட்டப்பேரவைத் தலைவர் வைத்தியலிங்கம் மறுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இம்முறை எவ்வித மறுப்புமின்றி தங்க விக்ரமனுக்குப் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் 12, திமுக 3, சுயேச்சை ஒருவர் என ஆளும் அரசுக்கு 16 பேரின் ஆதரவு உள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜக நியமன உறுப்பினர்கள் 3 என எதிர்க்கட்சி வரிசையில் 14 பேர் உள்ளனர்.