புதுச்சேரியில் கடற்கரை சாலையில் உள்ள 184 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் கவர்னர் செயிண்ட் சைமன் காலத்தில் கட்டப்பட்டது. இது ஒன்பது மீட்டர் அடித்தளமும் 29 மீட்டர் உயரமும் கொண்டது. புயலின் வேகம் இக்கட்டடத்தை பாதிக்காமல் இருக்க இரண்டு அடுக்குகள் கொண்டதாக அமைக்கப்பட்டு 1836ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி இக்கலங்கரை விளக்கம் பயன்பாட்டுக்கு வந்தது.
அப்போது உலகம் முழுவதும் இருந்த 250 கலங்கரை விளக்கங்களில் இதுவும் ஒன்றாக திகழ்ந்தது. இந்த கலங்கரை விளக்கம் செயல்பட தொடங்கியபோது ஆறு எண்ணெய் விளக்குகளும் அவற்றை பிரதிபலிக்க இரண்டு வெள்ளி தகடுகளும் பயன்படுத்தப்பட்டன. இந்தக் கலங்கரை விளக்கம் 1913இல் மின்விளக்காக மாற்றப்பட்டு மத்திய கலால் துறை கட்டுப்பாட்டில் வந்தது.