புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தனது அலுவலகத்தில் இருந்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், 'இந்தியாவில் கரோனா வேகமாக பரவிவருகிறது. இதைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி மாநில மக்கள், அரசால் வழங்கப்படும் அறிவுரைகளின்படி நடந்துகொள்ள வேண்டும். புதுச்சேரியில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும். ஆனால் சிலர் தவறாக மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கு இருக்கும் என பதிவிட்டு உள்ளனர்.
வெளி மாநிலத்தவர்கள் புதுச்சேரி எல்லையில் அனுமதிக்கப்படுவதில்லை. மக்கள் விழிப்போடு தனித்து இருக்க வேண்டும். கடைகளில் பொருள்களை வாங்க கூட்டமாக செல்ல வேண்டாம். வியாபாரிகள் இந்த நேரத்தில் பொருள்களை பதுக்கி கொள்ளை லாபம் அடிக்க வேண்டாம். மாகே பகுதியில் வைரஸ் தாக்குதலால் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினார். புதுச்சேரியில் 1024 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.