புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இடையூறாகவும், மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த தடையாகவும் தொடர்ந்து செயல்பட்டுவரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்விதமாக காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் கடந்த இரண்டு மாதங்களாகப் பல்வேறுகட்ட அறப்போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.
தொடர்ந்து உண்ணாவிரதம், முழு அடைப்பு போராட்டம் என கிரண்பேடிக்கு எதிராகப் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
அதன்படி புதுச்சேரி அண்ணா சிலை முன்பு காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சிகளான இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
காங்கிரஸ் போராட்டத்தில் நாராயணசாமி பங்கேற்பு இதனையடுத்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "பாஜக கைப்பாவையாக ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டுவருகிறார். அவரை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றுவருகிறது. வரும் 16ஆம் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும்.ஆளுநர் கிரண்பேடி திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.