புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் 365 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை மயிலம் ஆதினம் மடாதிபதி சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், நிலத்தை சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்துள்ளதாகவும் அதற்கு அரசு அலுவலர்கள் உடந்தையாக இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மயிலம் ஆதினம் ஆக்கிரமித்த 365 ஏக்கர் நிலம்: மீட்டுத்தர கிராம மக்கள் கோரிக்கை - மயிலம் ஆதினம்
புதுச்சேரி: பொம்மையார் பாளையம் கடலோர கிராமத்தில் 365 ஏக்கர் நிலத்தை மயிலம் ஆதீனம் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைக் கண்டிக்கும் வகையில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு ஊர் பயன்பாட்டுக்குத் தர வலியுறுத்தி பொம்மையார் பாளையம் கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர், கிழக்கு கடற்கரைச் சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மயிலம் ஆதீனம் மடாதிபதி 150 ஏக்கர் பரப்பளவு உள்ள புறம்போக்கு நிலத்திலிருந்த, அரிய வகை மரங்களை வெட்டிக் கடத்தியுள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல், கடற்கரை முகத்துவாரத்தை ஆக்கிரமிப்பு செய்து வேலிகள் போடப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள கிராம மக்கள், மயிலம் ஆதினத்தால் ஆக்கிரமிப்பு செய்த புறம்போக்கு நிலத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக மீட்டுத்தரவில்லை என்றால் அடுத்தக்கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.