மனிதர்களின் ஆரோக்கியத்தை கெடுப்பதில் சுற்றுச்சூழல் மாசுக்கு உள்ள பங்கு குறித்து சர்வதேச அளவில் 40 நாடுகளில் 400 அமைப்புகள் நடத்திய ஆய்வில், கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் 15 விழுக்காடு உயிரிழப்புகள் சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக உயிர்கள் மடிவதில் இந்தியாவும் சீனாவும்தான் முன்னிலை வகிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
திடீர் உயிரிழப்புகள் குறித்த சர்வதேச ஆவணங்களின்படி, கடந்த 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த 83 லட்சம் மரணங்களில் 23 லட்சம் மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. 18 லட்சம் பேர் சீனாவில் உயிரிழந்துள்ளனர். இவ்விரு நாடுகளுக்கு அடுத்ததாக நைஜீரியாவில் 2.79 லட்சம் பேரும், இந்தோனேஷியாவில் 2.32 லட்சம் பேரும், பாகிஸ்தானில் 2.23 லட்சம் பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த ஆவணங்களின்படி அமெரிக்காவில் 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிர் இழப்புகளை ஏற்படுத்துவதில் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் பங்கு எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கிறது என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக உலகில் நிகழும் உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்புகள் இந்தியா, சீனா, நைஜீரியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பங்களாதேஷ், ரஷ்யா, எத்தியோபியா, பிரேசில் ஆகிய 10 நாடுகளில்தான் நடப்பதாக GAHP-இன் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதில் சீனாவில் சராசரியாக ஆண்டுக்கு 12.42 லட்சம் மரணங்களும், இந்தியாவில் 12.40 லட்சம் மரணங்களும் நிகழ்வதாக அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆபத்தை உணர்ந்து தொழில்நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகள் காரணமாக சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு கட்டுப்படுத்தப்பட்டுவருகிறது.
அதேநேரத்தில், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் இந்தியாவில் 23 விழுக்காடு திடீர் உயிரிழப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் நிகழும் எட்டு மரணங்களில் ஒன்று சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக நிகழ்கிறது. இதன் காரணமாக குடிமக்களின் சராசரி ஆயுள் காலம் 1.7 ஆண்டுகள் குறைந்துள்ளன. Indian Council of Medical Research (ICMR) கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை இந்த புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் குறைந்ததற்கான ஆய்வுகள் எதுவும் இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்தியா சுற்றுச்சூழல் தூய்மையில் தற்போது ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொழிற்சாலைகள், நகரமயமாக்கல் மூலமாக சுற்றுச்சூழல் எவ்வாறு மாசுபட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறித்து இந்தியா ஆய்வு செய்ய வேண்டும் என்று GAHP வலியுறுத்தியுள்ளது. ரசாயண கழிவுகள் கலந்த நீரை பயிர்களுக்கு பாய்ச்சுவதன் மூலம் உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள், மனிதர்களின் ஆரோக்கியத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது. நாம் சமைக்கும் உணவு எந்த அளவு ஆபத்தானது என்பதை இது உணர்த்துகிறது.