அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவி மெலினா மற்றும் குழுவினருடன் பிப்ரவரி 24ஆம் தேதி ஆக்ரா செல்கிறார். அங்குள்ள தீனதயாள் உபாத்யாயா விமான நிலையத்தில் வந்திறங்கும் அவருக்கு உத்தரப் பிரதேச அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அண்மையில் டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக தாஜ்மஹால் தனது வெண்மை பொலிவையிழந்து சற்று மஞ்சள் நிறமாக காட்சியளிக்கிறது. இது உத்தரப் பிரதேச அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழி பிதுங்கும் அரசு
இதுமட்டுமின்றி யமுனை நதியும் நீரின்றி வறண்டு சாக்கடையாக உருமாறி ஓடுகிறது. இதனால் ட்ரம்ப், அவரது மனைவி மெலினா ஆகியோருக்கு வரவேற்பு அளிப்பதில் உத்தரப் பிரதேச அரசு நிர்வாகத்துக்கு மிகப்பெரிய மனக்கவலை ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் டொனால்டு ட்ரம்ப், தாஜ்மஹால் மற்றும் யமுனை நதியை பார்வையிடும்போது அவர் முன்வைக்கும் கேள்வி, “தாஜ்மஹாலின் மஞ்சள் நிறத்துக்கு என்ன காரணம்? யமுனை நதியா அல்லது கழிவு நீர் வடிகாலா? என்பதாகத்தான் இருக்கும்.
காரணம்
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு வந்தபோது, பொலிவிழந்த ஆக்ராவை காணநேரிட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் இம்முறை நடந்துவிடக் கூடாது என்பதில் உத்தரப் பிரதேச அரசு நிர்வாகம் முழு வீச்சில் செயல்பட்டுவருகிறது.
இதற்காக இன்று நடைபெற உள்ள நிர்வாகக் கூட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் கலந்துகொள்கிறார். முன்னதாக தாஜ்மஹால் மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றும் பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
பாதுகாப்பு தீவிரம்
அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி, ஒரு மீட்டருக்கு ஒரு காவலர் என்ற வீதத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுதவிர 800க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை வீரர்களும் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.
பிப்ரவரி 24ஆம் தேதி ஆக்ரா செல்லும் ட்ரம்ப், அன்றைய தினம் மாலை 6.30 மணியளவில் டெல்லி திரும்புகிறார். ஐசனோவர் மற்றும் பில் கிளிண்டனுக்குப் பிறகு, அன்பின் நினைவுச்சின்னமான தாஜ்மஹாலை பார்வையிடும் மூன்றாவது அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பிரியங்கா காந்தி?