தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 21, 2019, 12:38 PM IST

ETV Bharat / bharat

அக்டோபர் 21ஆம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இடைத் தேர்தல்!

டெல்லி: ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களோடு சேர்த்து தமிழ்நாட்டில் உள்ள இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி

ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவையின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. 90 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்துக்கு நவம்பர் 4ஆம் தேதியும் 288 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவுக்கு நவம்பர் 8ஆம் தேதியும் ஆட்சிக்காலம் நிறைவடைகிறது.

இந்நிலையில், இரு மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இரு மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இவ்விரு மாநிலங்களோடு சேர்த்து தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளான நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார், மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்பியானதால் அத்தொகுதி காலியானது. விக்கிரவாண்டியில் திமுக எம்எல்ஏ ராதாமணி திடீரென்று மரணமடைந்ததால் இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இன்று நண்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்குகிறது எனவும், அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details