ராணுவ தினத்தன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராணுவப் படைத் தலைவர் ஜெனரல் எம்.எம். நாரவனே, "நாங்கள் அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டவர்கள். வீரர்களாக இருந்தாலும் சரி, உயர் அதிகாரிகளாக இருந்தாலும் சரி அரசியலமைப்பைக் காப்பதற்காகவே உறுதியெடுத்துள்ளோம். அதுவே, எங்களை வழிநடத்துகிறது. நம் அரசியலமைப்பின் முன்னுரையில் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை கூறப்பட்டுள்ளது. அவற்றிற்காகத் தான் நாங்கள் போராடுகிறோம்" என்றார்.
குறிப்பாக அவர், இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு வீரனும் "இந்திய அரசியலமைப்பிற்கு உண்மையாகவும் நம்பிக்கையையுடனும் இருப்பேன்" என்றே உறுதியேற்கிறான் எனத் தெரிவித்தார். இது அனைவரும் அறிந்த ஒன்றே என்ற போதிலும், ராணுவத்தில் அரசியலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக விமர்சனங்களும் மறுபக்கம் எழுந்துவருகின்றன. அதனால்தான் மேற்கூறிய கருத்து மிக முக்கியமானதாகவும் வலிமையானதாகவும் கருதப்படுகிறது. அண்மையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து தற்போதைய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் கருத்துக்களை, எதிர்க்கட்சித் தலைவர்களும் சில ராணுவ வீரர்களும் விமர்சித்திருந்தனர்.
'தேசமே அனைத்தையும் விட முதன்மையானது' என்பதே ராணுவ நெறிமுறையின் அடிப்படை. நாட்டின் நலனுக்காகவே ராணுவம் உள்ளதே தவிர, ராணுவத்திற்காக எந்தவொரு நாடும் கட்டமைக்கப்படவில்லை. எந்தவொரு ஜனநாயகத்தை எடுத்துக்கொண்டாலும் மக்களின் விருப்பமானது, அவர்கள் தேர்ந்தெடுத்த அரசியல் தலைமை மூலமாகவே வெளிப்படுத்தப்படுகிறது. “அரசியல் கருத்துகளை ராணுவத்தில் திணிப்பது நியாயமற்றது. கொள்கைதான் போரை உருவாக்குகிறது; போர் என்பது வெறும் கருவி மட்டுமே. எனவே, ராணுவக் கண்ணோட்டத்தை அரசியலில் திணிப்பது வேண்டுமானால் சாத்தியமாகலாம்” என்கிறார் கிளாஸ்விட்ஸ்.
இருப்பினும், ராணுவத்தில் அரசியல் என்பது ஒரு சாரரின் அரசியல் கருத்துகளை முற்றாக ராணுவம் ஏற்றுக்கொள்கிறது என்பதில்லை. ராணுவ சமூகவியலில் முன்னணி அறிஞரான மோரிஸ் ஜானோவிட்ஸ் தனது 'The Professional Soldier' என்ற புத்தகத்தில், “ராணுவத்தின் நடவடிக்கைகளில் ஆழமான அரசியல் விளைவு உள்ளது. ஆனால், காலங்காலமாக ராணுவ அதிகாரிகள் எந்தவொரு ஒரு அரசியல் சித்தாந்தத்திற்காகவும் போராடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ராணுவத்திலிருந்து அரசியலை விலக்கி வைக்க நல்ல காரணங்கள் பல உள்ளன. அவற்றில் முதன்மையானது தொழில்முறை. குடிமக்களுக்கும் - ராணுவத்திற்குமான உறவுகளைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் பலர் ராணுவத்தின் தொழில்முறையையும் அதன் அரசியல் சார்பற்ற தன்மையையும் நேரடியாக இணைக்கின்றனர். ராணுவத்தையும் அரசியலையும் விலக்கி வைத்தால், அதன் தொழில்திறன் அதிகரிக்கும். மேலும், ராணுவம் என்பது பொதுமக்களின் கட்டுப்பாட்டை உடனடியாக ஏற்றுக்கொள்ளும். எந்தவொரு ஜனநாயகத்திற்கும் இது ஒரு வரவேற்கத்தக்க நிலைமைதான்.