டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி உள்ளது. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு கரோனா பரிசோதனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சஞ்சய் சிங் ட்வீட்டில், “அரவிந்த் கெஜ்ரிவால் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். அவர் செவ்வாய் கிழமையன்று கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்படுவார்” என கூறியிருந்தார்.
இந்தச் செய்தியை அறிந்ததும் டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குமார் குப்தா, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை போனில் தொடர்புகொண்டு அவரின் நலம் குறித்து விசாரித்தார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள ஆதேஷ், “அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கேள்விப்பட்டதும், நான் அவரிடம் பேசினேன். அவருடைய உடல் நலன் குறித்து கேட்டறிந்தேன். அவர் விரைவாக குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பிலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல் நலன் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, “உங்களுக்கு (அரவிந்த் கெஜ்ரிவால்) கோவிட்-19 பரிசோதனை முடிவுகள், பாதிப்பில்லை என்று வரவேண்டும். இவ்வாறு நான் பிரார்த்திக்கிறேன். விரைவில் குணமடையுங்கள் கெஜ்ரிவால்” என ட்வீட் செய்துள்ளார்.
இதேபோல் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நெருக்கமாக இருந்த குமார் விஸ்வாஸ், மாநிலங்களவை சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ.வும் பாஜக உறுப்பினருமான கபில் மிஸ்ரா ஆகியோரும் கெஜ்ரிவால் விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கெஜ்ரிவாலின் உடல் நலம் குறித்து மக்களிடையே பகிர்ந்துகொண்ட ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ராகவ் சாதா, “முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார். தங்களின் வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றிகள்” என கூறினார்.
இதையும் படிங்க: கெஜ்ரிவாலுக்கு கரோனா? - நாளை பரிசோதனை