மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இன்று தனது 56ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி முக்கிய தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து செய்தியில், " இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அவர் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் நமது தேசம் காண்கிறது. நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. இந்தியாவின் சேவையில் தொடர்ந்து பங்கெடுக்க நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை கடவுள் அவருக்கு ஆசீர்வதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் எழுதியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "உங்கள் பிறந்தநாளில் எனது வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் இன்னும் நல்ல ஆரோக்கியத்துடன், பலகாலம் வாழவும், தேசத்திற்கும் மக்களுக்கும் சேவை புரியவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் ட்விட்டர் பதிவில், " ஒரு திறமையான, ஆற்றல்மிக்க, தேசபக்தி கொண்ட, வலுவான மற்றும் தொலைநோக்குடைய ஒரு தலைவரை கொண்டிருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அவர் நம் நாட்டை அனைத்து கோணங்களிலிருந்தும் மிகவும் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் மாற்றியுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பதிவில், "பிரபல அரசியல்வாதி, அற்புதமான அமைப்பாளர், போர்க்குணமிக்க மற்றும் திறமையான சிந்தனையாளர், நாட்டின் உள்துறை பாதுகாப்பை அசைக்க முடியாதவண்ணம் மாற்றிய அமைச்சர் " என புகழாரம் சூட்டியுள்ளார்.