ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் தேடிவருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் அளிக்குமாறு ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை இன்று காலை அணுகினார்.
இதனை விசாரித்த உச்சநீதமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா அவரது மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்தார். மேலும், இதனை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.
ஆனால், உச்சநீதிமன்ற தலைமை நீதபதி ரஞ்சன் கோகாய், அயோத்தி தொடர்பான வழக்கை விசாரித்து வருவதால் ப.சிதம்பரத்தின் மனுவை விசாரிக்க முடியாது என தெரிவித்தார். இதனால், இந்த மனு அருண் மிஸ்ரா அமர்வுக்கு பரிந்துரைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், ப.சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது என்றும், அவர் சட்ட வல்லுநர் என்பதால் இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்பார் என்றார்.