இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன்காரணமாக, பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து மகாராஷ்டிர அரசு அறிவித்திருந்தது.
சிவசேனா கூட்டணி அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மேலும், தேர்வுகளை நடத்த மாநில அரசை வலியுறுத்தக்கோரி, மகாராஷ்டிர மாநில ஆளுநரை எதிர்க்கட்சிகள் சந்தித்தன. இதைத்தொடர்ந்து, தேர்வுகள் நடத்தப்படவில்லையென்றால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என ஆளுநர் தெரிவித்தார்.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சம்னாவில், இச்சம்பவம் தொடர்பான செய்திக் கட்டுரையொன்று வெளிவந்துள்ளது.
அதில், 'நம்முடைய வருங்கால சந்ததியினரின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் அரசியல் ஈகோவை விட்டுவிட்டு கரோனா பரவலைத் தடுக்க தேவையான முயற்சிகளில் ஈடுபடவேண்டும். ஆளுநரின் அறிவை நாங்கள் மதிக்கிறோம். அவர் அறிவானவர் தான். ஆனால், ஆளுநர் மாளிகைப் பக்கம் பைத்தியக்காரப்புயல் ஒன்று அடிக்கடி வீசுகிறது. அந்தப்புயலில் இருந்து ஆளுநர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
கடைசி செமஸ்டர் தேர்வுகளை நாங்கள் ரத்து செய்யும் முடிவுக்கும், கடைசி செமஸ்டர் தேர்வுக்கு முன்பு எழுதிய செமஸ்டர் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கும் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் ஆதரவைத் தெரித்துள்ளனர்' என்று தெரிவித்துள்ளது.