நாட்டில் கரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்கள வீரர்களாக தன்னலமற்று செயலாற்றிவரும் மருத்துவப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், செய்தியாளர்கள் ஆகியோருக்கும் கரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது. நாட்டில் கரோனாவால் அதிக பாதிப்புகளான மகாராஷ்டிராவில் இதன் நிலைமை மோசமாக உள்ளது.
இந்த நிலையில், மும்பையில் போக்குவரத்து துறையைச் சேர்ந்த 57 வயது காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது. கரோனா எளிதில் தாக்கக்கூடிய வயதினராக இருந்ததைக் கருத்தில் கொண்டு, இவருக்குக் கடந்த 15 நாள்கள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்துள்ளார்.
இதனால் மகாராஷ்டிராவில் கரோனாவால் உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. அதில் மும்பையில் ஏழு காவலர்களும், நாசிக், புனே, சோலப்பூரில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த வியாழக்கிழமை (மே 14) மாலை முதல் இதுவரை 150 காவலர்களுக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1,153ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 174 பேர் இத்தொற்றிலிருந்து முழுவதுமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் இதுவரை 85,940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மகாராஷ்டிராவில் மட்டும் 29,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கரோனாவால் இதுவரை 2,752 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,068 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:தெலங்கானாவில் லாரி மீது கார் மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு!