டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேர்வுக் கட்டண உயர்வை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த முகமூடி கும்பல் ஒன்று இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றைக் கொண்டு அங்கிருந்த மாணவர்கள், பேராசிரியர்களை சரமாரியாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில், மாணவர் சங்கத் தலைவி ஆயிஷ் கோஷ் உள்ளிட்ட பல மாணவர்களும், ஆசிரியர்களும் காயமடைந்தனர்.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு முகமூடி கும்பலை ஏவியது பல்கலைக்கழக துணை வேந்தர் ஜகதீஷ் குமார் தான் என குற்றம்சாட்டியுள்ள மாணவர்கள், வன்முறைக்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் உள்ளிட்ட ஒன்பது பேரின் புகைப்படங்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இது ஜேஎன்யூ மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், துணை வேந்தர் ஜகதீஷ் குமாருக்கு சாதகமாக காவல் துறை நடந்துகொள்வதாக மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக ஜே.என்.யு. மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜே.என்.யு. வன்முறைச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கை சுத்தப் பொய். இதில் என்ன வேடிக்கை என்றால், அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஆர்எஸ்எஸின் மாணவர் சங்கம்) உறுப்பினர்கள் மட்டும் பட்டியலில் இடம்பெறவில்லை.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத் குறித்து காவல் துறையினர் மௌனமாக இருப்பது காதை அடைப்பது போல் சத்தமாக உள்ளது. இதிலிருந்து காவல் துறையினரின் விசாரணையில் அரசியல் உள்நோக்கம் இருப்பது தெளிவாகியுள்ளது" எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஜேஎன்யுவில் தொடரும் போராட்டத்தை ஒடுக்க வலுவடையும் வன்முறை.!