புதுச்சேரி மாநில அரசின் பொதுப்பணித்துறை சார்பில் உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள, சுதேசி ஆலை வளாகத்தில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி, உந்து மோட்டார்கள் உள்ளிட்டவை 20 கோடி ரூபாய் செலவில், ஹட்கோ நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவிற்கு பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்க, உருளையன்பேட்டை தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா, காமராஜ் நகர் தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜான் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், மாநில முதலமைச்சர் நாராயணசாமி இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நீர்தேக்க தொட்டிகளை, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார். இதனிடையே பொதுப்பணித் துறையில் பணியாற்றும் வவுச்சர் ஊழியர்கள், சங்கத்தின் தலைவர் சரவணன் தலைமையில், பணிநிரந்தரம், சம்பள உயர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, முதலமைச்சர் நாராயணசாமியைச் சந்திக்க அவரது வீட்டின் முன்பு திரண்டிருந்தனர்.
அவர் உருளையன்பேட்டை விழாவில் பங்கேற்கச் சென்ற தகவலறிந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர், விழா நடைபெற்ற இடத்திற்கு இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்கள், திடீரென விழா அரங்கிற்குள் செல்ல முயன்றதால், அவர்களை ஒதியன்சாலை, உருளையன்பேட்டையைச் சேர்ந்த காவலர்கள் தடுத்துநிறுத்தினர்.
நான்கு முதல் ஐந்து பேர் மட்டுமே, முதலமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சரைச் சந்திக்க முடியும் எனவும், மற்றவர்களை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர். இதனால் காவல் துறையினருக்கும், பொதுப்பணித் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், காவலர்கள் அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்துநிறுத்தினர்.
பின்னர் விழாவில் பங்கேற்று திரும்பிய முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், சட்டப்பேரவை உறுப்பினர்களை காவலர்கள் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறை அலுவலர்களில் சிலர் திடீரென, முதலமைச்சர், அலுவலர்கள் கார்களை வழிமறித்து, சாலைகளில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காவலர்களுக்கும், வவுச்சர் பணியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த காவலர்கள் லத்தியால் அவர்களை அடித்து விரட்டினர்.