பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை, ராகுல் காந்தி பல்வேறு விவகாரங்களிலும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், கல்வான் பகுதியில் இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும் அதை பிரதமர் மோடியும் மத்திய அரசும் நாட்டு மக்களிடம் இருந்து மறைப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய ராணுவத்தின் திறனும் வீரமும் அனைவருக்கும் தெரியும். பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர!
சீனா நம் நிலத்தை ஆக்கிரமிக்க அவரது கோழைத்தனம் அனுமதிக்கிறது. அவரது பொய்கள், சீனா ஆக்கிரமித்த நம் நிலத்தை அவர்களே வைத்துக்கொள்ள உதவுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் காஷ்மீர் மாநிலத்திலுள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் சீனா தரப்பில் சிலர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல் இந்தியப் பகுதிக்குள் நடந்ததாகவும், சீனா அத்துமீறி இந்திய எல்லைப் பகுதியில் நுழைந்ததே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்றும் இந்திய ராணுவம் குற்றஞ்சாட்டியது. ஆனால், இந்தியாவில் யாரும் ஊடுருவவில்லை என்று இந்தியா ராணுவரத்தின் கருத்துக்கு முற்றிலும் நேர்மாறான கருத்தை பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்திய எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன - பி.எஸ்.எஃப் தலைவர் உறுதி!