டெல்லி:இந்தியா - சீனா எல்லையான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களுடன் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (ஜூன் 19) பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வழியாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், ‘சீனப் படைகள் இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை. இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் சீன வீரர்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர்’ என்று கூறினார்.
பிரதமர் மோடியின் கூற்று குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வியை எழுப்பினர். இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழையவில்லையென்றால் ஏன் அவர்களுடன் சண்டை வந்தது? எதற்காக 20 வீரர்கள் உயிரிழந்தனர் என்று ராகுல் காந்தி, ப.சிதம்பரம் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வியை எழுப்பினர். இவ்வேளையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், ‘எல்லையில் நடந்த சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை என்று தான் அனைத்துக் கட்சி கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் நேற்று தெரிவித்த கருத்து தொடர்பாக சிலர் தவறான தகவல்களை கூறுகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி உள்ளே வர முயன்றால் இந்தியா பதிலடி கொடுக்கும், சீனாவின் முயற்சி பாதுகாப்பு படையினரின் துணிச்சலான செயலால் முறியடிக்கப்பட்டது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்’ என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.