கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அப்போது பிரதமர் மோடி, '' சீன வீரர்கள் நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலத்தையும் கைப்பற்றவில்லை. நமது எல்லையைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நமது வீரர்களின் தியாகம் வீண் போகாது'' என்றார்.
இந்தக் கருத்துக்கள் பல்வேறு கட்சித் தலைவர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை என்றால், நமது ராணுவ வீரர்களைக் கொலை செய்தது யார் எனக் கேள்வியெழுப்பினர். இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய கருத்துக்கள் பற்றி பிரதமர் அலுவலகம் சார்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இச்சூழலில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், பேசுவதற்கு முன்பு நன்றாகச் சிந்தித்துப் பேச வேண்டும் என பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறியுள்ளனர். அதில், ''எதையும் பேசுவதற்கு முன்பாகச் சிந்தித்துப் பேச வேண்டும். பிரதமரின் பேச்சுக்கள் நமது நிலையை வலுவிழக்கச் செய்துவிடும். நமது ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகங்களை வாக்கரசியலுக்காகப் பயன்படுத்தக் கூடாது'' என்று கூறியுள்ளனர்.