137 பி.எம்.சி. கிளைகள்
பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நாட்டின் சிறந்த 10 கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. 1984ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்ட இந்த வங்கி மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கோவா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் 137 கிளைகளைக் கொண்டிருக்கிறது.
ஆர்பிஐ விதிகள் மீறல்
இதனிடையே, பி.எம்.சி. வங்கி ஆர்பிஐ விதிகளை மீறி கடன் வழங்குவதற்காக 21 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலி கணக்குகள் உருவாக்கியது எனவும் இதன்மூலம் ஹெச்.டி.ஐ.எல். உள்பட 44 நிறுவனங்கள் பலனடைந்தன எனக் கண்டறியப்பட்டது. அந்தக் கணக்குகள் வாயிலாக சுமார் ஏழாயிரம் (7,000) கோடி ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் ராகேஷ் வாதவான், சாரங் வாதவான் ஆகியோர் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் கைதுசெய்யப்பட்டு மும்பை ஆர்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வீட்டுக்காவல் கோரிக்கை
இவர்கள் இருவரும் தங்களை சிறையிலிருந்து விடுவித்து, வீட்டுக் காவலில் வையுங்கள் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ராகேஷ், சாரங்குக்கு ஆதரவாக உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக அரசு சார்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டோ, நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மத்திய அரசு வழக்குரைஞர் துஷார் மேக்தா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், "இது ஏழாயிரம் கோடி விவகாரம். சம்பந்தப்பட்ட நிறுவன சொத்துகளை விற்று, வாடிக்கையாளர்களின் பணம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் தந்தை-மகனுக்கு வீட்டுக் காவல் அளித்தால் அது பிணை கொடுப்பது போன்றதாகும். ஆகவே அவர்களுக்கு வீட்டுக் காவல் கொடுக்கும் உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும்" என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தனர்.
இதையும் படிங்க: 'பசுவைத் தொட்டால் எதிர்மறை எண்ணங்கள் மறைந்துவிடும்' - பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் காங். அமைச்சர்!