பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (பிஎம்சி), மும்பை பாந்தர் பகுதியை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 137 கிளைகள் உள்ளன. இந்நிலையில், இந்த வங்கி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹெச்.டி.ஐ.எல்.க்கு பல்லாயிரக்கணக்கான போலி கணக்குகளை உருவாக்கி பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கியுள்ளது. மேலும், அந்தக் கடன்களை அந்நிறுவனத்திடம் பிஎம்சி திருப்பி வாங்காமல் இருந்துள்ளது.
இதனைக் கண்டுபிடித்த ரிசர்வ் வங்கி, கடந்த மாதம் பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்கள் பண எடுப்பதற்குத் தடை விதித்து, வங்கிக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்தது.அதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு அலுவலர்கள், வங்கியின் முன்னாள் இயக்குநர் ஜோய் தாமஸை கைது செய்யப்பட்டு நாளை வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிஎம்சி வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங்கையும் ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தைச் சேர்ந்த ராகேஷ் வதவன், சரங் வதவன் ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இதனால் கொதிப்படைந்த வங்கியின் வாடிக்கையாளர்கல் மும்பையில் போராட்டங்களில் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், பஞ்சாப்பைச் சேர்ந்த ஃபாத்தோமல் என்ற வாடிக்கையாளர் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். முன்னதாக, பிஎம்சி வங்கியில் 90 லட்சம் ரூபாய் செலுத்தியிருந்த 51 வயதான முன்னாள் ஜெட் ஏர்வேஸ் ஊழியர் சஞ்சய் குலாத்தி என்பவரும் நேற்று மாரடைப்பால் உயிரிழந்த ஈரம் காய்வதற்கு முன்பே மற்றொரு வாடிக்கையாளரும் இறந்த சம்பவம் மற்ற வாடிக்கையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.