வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று, அவர் இந்திய-வங்கதேச தொழில்முறை கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது இருநாடுகளுக்கு இடையே தொழில், கலாசாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என உறுதியளித்தார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா - மோடி சந்திப்பு: 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து - தேசியக் குடியுரிமை பதிவேடு
டெல்லி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன், பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இருநாட்டுக்கும் இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்நிலையில், இன்று மாலை தலைநகர் டெல்லியில் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது நீர் வளம், கலாசாரம், கல்வி, கடலோர கண்காணிப்பு உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இச்சந்திப்பின் போது என்ஆர்சி (தேசியக் குடியுரிமை பதிவேடு), ரோஹிங்கியா உள்ளிட்ட பிரச்னைகளை இருதலைவர்களும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
கூட்டத்தைத் தொடர்ந்து, போக்குவரத்து, இணைப்பு, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குச் சமையல் எரிவாயு இறக்குமதி செய்வது, உள்நாட்டு மற்றும் கடல்சார் கப்பல் போக்குவரத்தை எளிமைப்படுத்தவது உள்ளிட்ட மூன்று திட்டங்களை பிரதமர்கள் தொடங்கிவைத்தனர்.