டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 34ஆவது பிரகதி உரையாடல் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில், சுகாதார மற்றும் மருத்துவக் கல்வித் துறைகளின் நிர்வாகச் செயலாளர்கள், மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்களின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டுவரும் உதம்பூர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டம் உள்பட 7 அமைச்சகங்கள் தொடர்பான 11 திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வுசெய்தார்.
அப்போது, காஷ்மீரின் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை அதிவேகமாக உயர்த்துவதற்கான திட்டத்தின் திறனை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இத்திட்டத்தை 15.08.2022 ஆம் தேதிக்குள் நிறைவுசெய்ய வேண்டும் என்று காலக்கெடுவை நிர்ணயித்தார்.
மேலும், ஜல் ஜீவன் மிஷன் மூலம் நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் 2024-க்குள் போதுமான அளவு சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்றும் கூறிய பிரதமர், இந்த முயற்சிகள் கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை திருப்தி - மத்திய வேளாண்துறை அமைச்சர்