தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: செய்திகள் உடனுக்குடன்! - பிரதமர் மோடி ஜி ஜின்பிங் உச்சிமாநாடு

Modi

By

Published : Oct 12, 2019, 9:06 AM IST

Updated : Oct 12, 2019, 2:43 PM IST

14:39 October 12

இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்ட மோடியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் வழியனுப்பிவைத்தனர்.

14:33 October 12

கோவளத்திலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. 

14:14 October 12

இரண்டு நாள் பயணத்தை முடித்து கொண்டு கோவளத்திலிருந்து டெல்லி செல்ல மோடி விமான நிலையம் புறப்பட்டார்.

14:09 October 12

மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல்மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும். மாமல்லபுரத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசிற்கும் நன்றி" என பதிவு செய்துள்ளார்.

14:06 October 12

"மாமல்லபுரத்தை தவிர்த்து வேறு இடம் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சந்திப்புக்கு சென்னையைத் தேர்ந்தெடுத்ததில் இரு தரப்பும் ஒத்துழைப்பு அளித்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததில் மோடி உறுதியாக இருந்தார்" என விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

13:47 October 12

மோடி, ஜின்பிங் சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை என வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

13:39 October 12

பாதுகாப்பு, வர்த்தம் குறித்து பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடுப்பு, காலநிலை மாற்றம் குறித்தும் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

13:34 October 12

மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது இரண்டாவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வந்தமைக்காக அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். #ChennaiConnect இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்" எனப் பதிவு செய்தார்.

13:28 October 12

இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டார். வழியனுப்பிவைக்கும் விதமாக விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

13:24 October 12

சீன அதிபரை வழியனுப்பிவைக்க தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் விமான நிலையம் வருகை.

13:17 October 12

சீன அதிபர் விமான நிலையம் செல்வதையொட்டி கிண்டி, அடையாறு, ராஜிவ்காந்தி சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

12:55 October 12

இருதரப்பு பேச்சுவார்த்தை, மதிய உணவைத் தொடர்ந்து, கோவளம் விடுதியிலிருந்து புறப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி வழியனுப்பிவைத்தார். விமான நிலையம் செல்லும் சீன அதிபர் அங்கிருந்து நேபாளம் செல்லவுள்ளார்.

12:49 October 12

பிரதமர் மோடியின் உருவம் பொறித்த சீன பீங்கான் தட்டை இந்திய பிரதமருக்கு சீன அதிபர் ஜின்பிங் பரிசாகக் கொடுத்தார்.

12:39 October 12

ஜின்பிங் உருவம் பொறிக்கப்பட்ட சால்வையை சீன அதிபருக்கு இந்திய பிரதமர் பரிசாக அளித்தார்.

வெண்கலச் சிற்பங்கள், குத்து விளக்குகள் தயாரிப்பு குறித்தும் ஜின்பிங்குக்கு விளக்கப்பட்டது. காஞ்சிப் புடவை ஒன்றையும் ஜின்பிங் உருவம் பொறிக்கப்பட்ட சால்வை ஒன்றையும் சீன அதிபருக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்தார். 

12:24 October 12

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் கலைப்பொருட்களை பார்வையிடுகின்றனர்.

தறி, சிற்ப, தஞ்சை ஓவியங்களை பிரதமர் மோடி, சீன அதிபர் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, காஞ்சிப்பட்டு தயாரிக்கும் முறையை சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கினார்.

11:56 October 12

'மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன்' என தமிழில் பேச்சைத் தொடங்கிய மோடி, "சீன, தமிழ்நாடு இடையே கலாசார, வணிகத் தொடர்பு இருந்துள்ளது. 2000ஆம் ஆண்டுகளாக இரு நாடுகளும் பொருளாதார ரீதியாக வலிமையாக இருந்துள்ளது. கடந்த ஆண்டு உஹானில் நடந்த உச்சி மாநாட்டால் இரு நாட்டின் உறவுகள் மேம்பட்டன" என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், "நேற்று நண்பர்கள் போல் மனம்விட்டு இருநாட்டு உறவுகள் பற்றி பேசினோம். இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட விருந்தோம்பலை கண்டு வியப்படைந்தோம். இது எங்களுக்கு மறக்கமுடியாத அனுபவம். இந்திய, சீன உறவில் சென்னை சந்திப்பு முக்கிய பங்கை வகிக்க உள்ளது" எனத் தெரிவித்தார்.

11:31 October 12

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, உயர் மட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. மோடி, ஜின்பிங் தலைமையில் நடைபெற்றுவரும் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,  வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே ஆகியோரும், சீன சார்பில் அந்நாட்டு வெளியுறவு துறை வாங் யி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

11:18 October 12

ஓரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இருநாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை முடிவடைந்தது. 

11:14 October 12

இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர், இந்திய, சீன நாட்டைச் சேர்ந்த உயர் மட்ட அலுவலர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. 

10:56 October 12

பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும் உயர்மட்ட அலுவலர்களுக்கும் இந்தியா சார்பில் நரேந்திர மோடி மதிய உணவு விருந்து அளிக்கவுள்ளார்.

10:22 October 12

பேட்டரி காரில் செல்லும் இரு நாட்டுத் தலைவர்கள்

பேட்டரி காரில் உரையாடியபடியே மோடி, ஜி ஜின்பிங் பயணித்தனர். பின்னர், கண்ணாடி அறையில் அமர்ந்துகொண்டு இருவரும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். 

10:11 October 12

கண்ணாடி அறையில் பேச்சுவார்த்தை நடத்தும் இரு நாட்டு தலைவர்கள்

கோவளம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மோடி வரவேற்றார்.

09:57 October 12

சீன அதிபர் ஜி ஜின்பிங் பலத்த பாதுகாப்புடன் கோவளம் செல்வதால் ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் உணவக விடுதி சென்றடைந்த பின்னர் பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

09:47 October 12

பிரதமர் மோடியை 2வது நாளாக சந்திக்க தனித்துவமான காரில் கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங் .

09:39 October 12

மோடியின் ட்வீட்

மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் 30 நிமிடங்களுக்கு மேல் ஈடுபட்டேன். குப்பைகளை விடுதி ஊழியர் ஜெயராஜிடம் கொடுத்தேன். பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம். ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்" எனப் பதிவு செய்துள்ளார்.

09:25 October 12

குப்பைகளை அள்ளும் மோடி

மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள குப்பைகளை பிரதமர் நரேந்திர மோடி வெறும் கைகளால் அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

09:21 October 12

உடற்பயிற்சியில் ஈடுபட்ட மோடி

சென்னை மாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி உடற்பயிற்சி மேற்கொண்டார்.

09:17 October 12

கோவளம் செல்ல உள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பயணத்தில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா உணவகத்திலிருந்து சற்று நேரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்படவுள்ளார்.

09:07 October 12

நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள்

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை வரவேற்கும் விதமாக கோவளத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர்.

07:07 October 12

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான இரண்டாவது நாள் சந்திப்பின் செய்திகளை நமது ஈடிவி பாரத் உடனுக்குடன் வழங்கிவருகிறது.

சீனர்கள், சீன அதிபரை வரவேற்க காத்துக் கொண்டிருக்கின்றனர்

ஐ.டி.சி. சோழா நட்சத்திர விடுதிக்கு வெளியே இந்திய வாழ் சீனர்கள், சீன அதிபரை வரவேற்க காத்துக் கொண்டிருக்கின்றனர். பிரதமர் மோடியை அவர் கோவளத்தில் சந்திக்கவுள்ளார். இதனால், கோவளம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

Last Updated : Oct 12, 2019, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details