2014ஆம் ஆண்டைத் தொடர்ந்து சென்ற 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று, முதல் ஆண்டு நிறைவு செய்துள்ளதை அடுத்து, நாட்டு மக்களுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார்.
அதில் கரோனாவுக்கு எதிரான நீண்டகால போரில், இந்தியா வெற்றிக்கான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், குடிபெயர் தொழிலாளர்கள் மிகப்பெரிய துன்பங்களை சந்தித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
சாதாரண சூழ்நிலை என்றால் தான் மக்கள் மத்தியில் இருந்திருப்பதாகவும், ஆனால், தற்போதைய கரோனா சூழல் அதனை அனுமதிக்கவில்லை என்றும், தான் மக்களுக்கு கடிதம் எழுதுவதற்கான காரணங்களை விளக்கியுள்ளார்.
வரலாற்று முடிவுகள் :
”தங்களது அரசாங்கம் வரலாற்று முடிவுகளை எடுத்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்தியா வேகமாக முன்னேறியுள்ளது. எனினும், இந்தியா சந்தித்து வரும் பிரச்னைகள், சவால்கள் குறித்து நிறைய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியுள்ளது.
நான் இரவும் பகலும் உழைக்கிறேன். என்னிடம் குறைபாடுகள் இருக்கக்கூடும், ஆனால் நம் நாட்டில் இல்லாதது என்று எதுவும் இல்லை. நான் மக்களாகிய உங்களை நம்புகிறேன், உங்கள் பலம், திறன்களை என்னைவிட அதிகம் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
குடிபெயர் தொழிலாளர்கள் :
கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தனது ஒற்றுமையாலும் உறுதியாலும் உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் இதேபோல் பொருளாதார மறுமலர்ச்சியிலும் ஒரு முன்மாதிரியாக அமையும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.
நாட்டின் கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு தொழில் செய்யும் கைவினைக் கலைஞர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பெரும் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் கஷ்டங்களைப் போக்க நாங்கள் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்.
கரோனாவை பேரழிவாக மாற்றாதீர்கள் :
தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பொறுத்துக்கொள்ளுங்கள், இந்த சூழலை பேரழிவாக மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தியர்கள் ஒவ்வொருவரும் அனைத்து விதிகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவது முக்கியம். இதுவரை மக்கள் விதிகளைத் தவறாமல் பின்பற்றியுள்ளீர்கள், இதைத் தொடர வேண்டும்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா பாதுகாப்பானதாகவும், பல நாடுகளை விட சிறப்பாக செயல்படுவதற்கும் இது ஒரு முக்கிய காரணம். இது ஒரு மிக நீண்ட யுத்தம், நாம் இதில் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மறுமலர்ச்சி :
கரோனாவிற்கு பிந்தைய உலகைப் பற்றி பேசியுள்ள பிரதமர் மோடி, ”இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் எவ்வாறு மீட்கப்படும் என்பது குறித்து பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.