டெல்லி:இன்று (அக்.22) 56 வயதை எட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2014ஆம் ஆண்டு முதல் ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் தேசியத் தலைவராக இருந்தார். அவர் எடுத்த நடவடிக்கைகளால் கட்சி பெரிதும் வளர்ச்சி அடைந்து பல மாநிலங்களில் பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றியது. 2014ஆம் ஆண்டைவிட 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பாஜக வெல்ல அமித் ஷா ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.
இரண்டாவது முறையாக பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததையடுத்து, பிரதமர் மோடி அவரை அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக தேர்வு செய்தார். 1964இல் மும்பையில் பிறந்த அமித் ஷா, தனது ஆரம்ப நாள்களிலிருந்து ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்துடன் (ஆர்.எஸ்.எஸ்) தொடர்பு கொண்டிருந்தார்.
குஜராத்தில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின்போது அமித் ஷா உள்துறை அமைச்சராக பணியாற்றினார். 2014ஆம் ஆண்டில் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து பல மாநிலங்களில் குறிப்பாக, வடகிழக்கில் தேர்தல் வெற்றிகளுக்கு கட்சியை வழிநடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.
2014ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் கட்சிப் பொறுப்பாளராக இருந்த அவர், பொதுத்தேர்தலில் 80 இடங்களில் 73 இடங்களை வென்றெடுக்க பாஜகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் உறுதுணையாக நின்றார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக அமித் ஷா கடுமையாக பரப்புரை மேற்கொண்டார். இதன் காரணமாக பாஜக 303 இடங்களை வென்றது.
காந்திநகரில் இருந்து முதல் முறையாக மக்களவை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமித் ஷா, மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு உள்துறை பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அமித் ஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அவர் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் நமது தேசம் காண்கிறது. நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. இந்தியாவின் சேவையில் தொடர்ந்து பங்கெடுக்க நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை கடவுள் அவருக்கு ஆசீர்வதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.