காந்திநகர் (குஜராத்): இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு மருந்து தயாரிப்புப் பணிகள் குறித்து பிரதமர் மோடி இன்று (நவம்பர் 28) ஆய்வு செய்தார்.
தற்போது, குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள ஆராய்ச்சி மையங்களில் தடுப்பு மருந்து பரிசோதனைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று காலை விமான மூலம் குஜராத் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி உற்சாக வரவேற்பு அளித்தார்.
தொடர்ந்து, அகமதாபாத் அருகே உள்ள ஜைடஸ் கேண்டிலா (Zydus Candila) நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு மருந்து தயாரிப்புப் பணிகள் குறித்து அந்நிறுவன ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டறிந்தார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், " ஜைடஸ் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தின் தயாரிப்பு பணிகள் குறித்து அறிந்துக் கொள்வதற்காக, இன்று அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பையோ டெக் பார்க்கினைச் சென்று பார்வையிட்டேன்.
தடுப்பு மருந்து பணியில் ஈடுபட்டுள்ள குழுவினரை சந்தித்து பாராட்டினேன். இப்பணியை தொடர்ந்து மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் அவர்களுக்கு செய்து தரப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஜைடஸ் நிறுவனத்தின் முதற்கட்ட பரிசோதனை நிறைவுப்பெற்றாக அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் இரண்டாம் கட்ட பரிசோதனைப் பணிகள் தொடங்கியது.
தற்போது, பிரதமர் மோடி தெலங்கானா மாநிலம் ஹைதாரபாத்தில் உள்ள பாரத் பையோடெக் நிறுவனத்தின் தயாரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் உள்ள சீரம் நிறுவனத்தையும், ஆய்வு செய்கிறார்.
ஆஸ்ரோசெனேகா, ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்துடன் இணைந்து உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனமாக சீரம், தற்போது கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. அதேபோல், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் மூன்றாம் கட்ட பரிசோதனைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.