இது தொடர்பாக நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலக்கரி சுரங்கங்களை கட்டவிழ்த்துவிடுதல்: ஆத்ம நிர்பார் பாரத்துக்கான புதிய நம்பிக்கைகள்” என்ற கருப்பொருளுடன் இந்த ஏலம் நடைபெற இருக்கிறது.
பிரதமர் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (சி.சி.இ.ஏ) கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டதுபோல, வர்த்தக நோக்கிலான நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்படவுள்ளன.
கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மூலம் நிலக்கரிச் சுரங்கங்களை சீரான நடைமுறைக்கு கொண்டுவந்து தன்னிறைவு இந்தியாவுக்கான தன்னம்பிக்கையை நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை மூலமாக ஏற்படுத்த அரசு தயாராகியுள்ளது.
சிறிது, நடுத்தரம் மற்றும் பெரிது என மூன்று பிரிவுகளான நிலக்கரி சுரங்கங்கள் இந்த ஏலத்தில் விற்பனைக்கு விடப்படும். வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தில் 50 நிலக்கரி தொகுதிகள் ஏலம் விடப்படும்.
வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தின் முந்தைய நடைமுறை, விலை, கட்டுப்பாடுகள் என முற்றிலும் மாறுபட்ட வகையில் இந்த ஏலம் நடைபெறும். முன்மொழியப்பட்ட ஏலத்தில் வணிக நட்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மட்டுமே இருக்கும்.
தேசிய நிலக்கரி குறியீட்டின் அடிப்படையில் நியாயமான நிதி விதிமுறைகள் மற்றும் வருவாய் பகிர்வு மாதிரிகள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த ஏலத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தை எடுக்கும் ஏலதாரர்கள் கடந்த காலத்தைப் போலல்லாமல் நிலக்கரி உற்பத்தியில் நெகிழ்வுத்தன்மையையும், ஆரம்ப உற்பத்தி மற்றும் நிலக்கரி வாயுவாக்கலுக்கான சலுகைகளையும் பெறுவார்கள்.
வருவாய் பகிர்வு அடிப்படையில் நிலக்கரியை வணிக ரீதியாக சுரங்கப்படுத்துவதற்கான ஒரு வழிமுறைக்கு மத்திய அரசு அளித்த ஒப்புதலின் அடிப்படையில் இந்த ஏலம் வரும் ஜூன்18 ஆம் தேதியன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,"ஜூன் 18 ஆம் தேதி நாட்டில் முதன்முதலாக வணிக நோக்கில் நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விட தொடங்குகிறோம். இந்த நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைக்கிறார்.
ஆத்ம நிர்பார் பாரத் அபியனின் கீழ் நிலக்கரி சுரங்கங்களை வர்த்தக நோக்கில் ஏலம்விட்டு தன்னிறைவான இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் வளர்ச்சிப் பாதையில் நாடு சென்றுக்கொண்டிருக்கிறது என பெருமிதம் அடையுங்கள்"என தெரிவித்துள்ளார்.