புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து தேசிய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், ஆறு மாநில விவசாயிகளுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். அந்நிகழ்ச்சியில், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு அடுத்த தவணையாக 18,000 கோடி ரூபாய் வழங்கவுள்ளார்.
விவசாயிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி - விவசாயிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி
டெல்லி: ஆறு மாநில விவசாயிகளுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாஜக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு பிரதமரின் உரையை கேட்கவுள்ளனர். டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பிரதமர் மோடியின் உரையை கேட்கவுள்ளனர்.
அஸ்ஸாமில் விவசாயிகளுடன் ஒன்றிணைந்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரதமரின் உரையை கேட்கவுள்ளார். இதுபோன்று மத்திய அமைச்சர்கள் அவரவர் சொந்த தொகுகுதியில் விவசாயிகளுடன் ஒன்றிணைந்து மோடியின் உரையை கேட்கவுள்ளனர்.