கரோனா பெருந்தொற்றின் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியுடன் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத்துடன் நேற்று (ஜன.28) தொலைபேசியில் உரையாடினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சுகாதார நெருக்கடியிலும் இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவில் எந்த பிணக்கும் ஏற்படவில்லை; இடைவிடாது ஒத்துழைப்பு தொடர்ந்தது குறித்து இருநாட்டு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.
மேலும், இருநாடுகளுக்கு இடையிலும் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்தாலோசித்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களின் நலனில் எப்போதும் தனிப்பட்ட கவனத்தையும், அக்கறையையும் செலுத்தி வரும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமதுக்கு பிரதமர் மோடி நன்றி கலந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
கரோனா நெருக்கடியை விரைவில் வென்றெடுக்கலாம் என நம்பிக்கை தெரிவித்த இரு தலைவர்களும், விரைவில் நேரில் சந்திப்பது குறித்தும் பேசிக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ’எனது நண்பர் ஷேக் முகமது பின் சயீத்துடன் ஒரு அன்பான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டேன். ஐக்கிய அமீரகத்தில் உள்ள இந்தியர்களின் மீது தனி கவனமெடுப்பதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெருந்தொற்று காலத்தில் கூட இருநாடுகளுக்கும் இருக்கும் கூட்டுறவை சீர்குலைக்க இயலவில்லை. இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தி பன்முகத்தன்மையோடு தொடர்ந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'கரோனா தொற்றுக் காலத்தில் தேர்தல் சவால்கள்' முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவட்டுடன் ஒரு நேர்காணல்!