இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் லடாக்கில் உள்ள லே எல்லைப்பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் பயணம் மேற்கொண்டார்.
முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவணே ஆகியோரும் பிரதமருடன் சென்றுள்ளனர். லே பகுதியில் உள்ள நிமு என்ற பகுதியில் முகாமிட்டுள்ள பாதுகாப்புப் படையினரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். மேலும், கல்வான் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்த இந்திய வீரர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
பின்னர் ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய மோடி, நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் பெருமைக்குரிய சின்னமாக விளங்கும் லடாக் தியாக உணர்வு மிக்க மக்களைக் கொண்டுள்ளது. பிரிவினை கருத்துகளை தெரிவிக்கும்போதெல்லாம் மக்கள் நாட்டிற்காக ஒன்றிணைந்து பகைவர்களை வென்று காட்டியுள்ளனர். ராணுவ வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நாடு என்று மறவாது. உங்களது தைரியத்தின் உயரம் நீங்கள் தற்போது நிற்கும் மலையின் உயரத்தை விட பெரியது.