ஜாலியன்வாலா பாக் படுகொலையில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியதுடன், “அவர்களின் வீரத்தையும், உயிர்த் தியாகத்தையும் ஒருபோதும் மறக்க மாட்டோம்” என்றார்.
மேலும், “இந்த நாளில் ஜாலியன் வாலாபாக் நகரில் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட விடுதலை தியாகிகளுக்கு நான் தலைவணங்குகிறேன். அவர்களின் தைரியத்தையும் தியாகத்தையும் நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவர்களின் வீரம், தியாகம் ஆண்டாண்டு காலமாக இந்தியர்களை ஊக்குவித்துக் கொண்டே இருக்கும்” என ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில் முன்னதாக அவர் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு சென்ற போது எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதங்கள் ஏதுமின்றி நிராயுதப்பாணியாக கூடியிருந்தனர்.
அவர்களை ஆங்கிலேய கர்னல் ஜெனரல் டையர் என்பவன் சுட்டுக் கொல்ல ஆணையிட்டான். இதையடுத்து பிரிட்டிஷ் ராணுவத் துருப்புகள் இயந்திர துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.
இதில் அங்கு கூடியிருந்த இந்தியர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசாங்க பதிவேட்டின்படி, “அங்கு 379 இந்தியர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர் என்றும் 1,200க்கு மேற்பட்டோர்கள் காயமுற்றனர்” என்றும் தெரியவருகிறது.
ஆனால் அங்கு ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்று மற்ற ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.