உலகப்புகழ் பெற்ற டைம் இதழ், ஆண்டுதோறும் உலகப் புகழ்பெற்ற 100 தலைவர்கள் என்ற பெயரில் பட்டியலை வெளியிட்டுவருகிறது.
அந்த வகையில் இந்த 2020ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தாக்கம் செலுத்திய 100 தலைவர்கள் என்ற பெயரில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, வரலாற்றுப் பேராசிரியர் ரவீந்திர குப்தா, இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டி பில்கிஸ் பானோ பெயர் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த என்ஆர்சி, சிஏஏ சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தப்போது, டெல்லி ஷாகீன் பாக் பகுதியிலும் போராட்டம் தொடங்கியது.
2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அந்த போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து கரோனா ஊரடங்கால் போராட்டம் நிறைவடைந்த மார்ச் 24ஆம் தேதிவரை முதுமையிலும் அந்த பாட்டி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டக்காரர்களுடன் சரிசமமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.