சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதைக் காண பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்றிருந்தார். இதையடுத்து, விக்ரம் லேண்டர் நிலவின் 2.1 கி.மீ தொலைவில் பயணிக்கும் போது, அதிலிருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டது.
அதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடமும் விஞ்ஞானிகளிடம் உரையாற்றினார். குறிப்பாக மாணவர்களிடம் பிரதமர் மோடி பேசுகையில், "வாழ்வில் இலக்கு என்பது மிகப் பெரியதாக இருக்க வேண்டும். அந்த இலக்கை துரத்தும் போது கடினமாக இருந்தாலும் சோர்வடையாமல் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.
உங்கள் இலக்குகளை சிறிய சிறிய பகுதிகளாக பிரித்து கொள்ளவேண்டும். முதலில் அந்த பகுதிகளில் வெற்றிபெறுங்கள். அவை அனைத்தையும் சேர்க்கும்போது, அது நமக்கு மிகப்பெரிய வெற்றியாய் அமையும். நீங்கள் எதை இழந்தீர்களோ... அதை மறந்து விடுங்கள். ஆனால், ஒரு போதும் அவற்றைக் கருதி எந்தவொரு வகையிலும் ஏமாற்றம் அடைந்துவிடாதீர்கள்" என்றார்.
பின்னர் பிரதமர் மோடி பூட்டான் மாணவர்களைச் சந்தித்தார். அப்போது அவர்களிடம் இந்திய மாணவர்கள் உங்களிடம் எப்படி நட்பு பாராட்டுகிறார்கள் எனக்கேட்டறிந்தார். முன்னதாக இந்த மாணவர்கள் அனைவரும் இஸ்ரோ நடத்திய ஆன்லைனில் விண்வெளி குறித்து நடத்தப்பட்ட விநாடி வினாவில் வெற்றி பெற்று, இஸ்ரோ கட்டுபாட்டு மையத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அவர் மாணவர்களுக்கு புத்தகத்தில் கையொப்பமிட்டு, அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது விக்ரம் லேண்டரிலிருந்து சரிவர தொடர்பு கிடைக்காததால் பரபரப்புடன் காணப்பட்ட இஸ்ரோ தலைவர் சிவனின் தோளைத் தட்டிக் கொடுத்து தைரியமாக இருங்கள், உற்சாகமாக இருங்கள் என்று கூறினார்.