இரண்டாம் முறை பதவியேற்றபின் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியின் மீது அதிகம் பாசம் காட்டிவருகிறார். செல்லுமிடமெங்கும் பிரதமர் மோடியின் நாவில் தமிழ் மொழி தாண்டவமாடத் திருக்குறள், புறநானூறு எனச் சங்கத் தமிழைத் தனது உரைகளில் தூவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இவரின் இந்த செயல்களால் தமிழ்நாடு பாஜக புலங்காகிதமடைந்து தமிழ் காக்க வந்த தலைமகன் என்றளவிற்கு ட்விட்டரில் போற்றிப் பாடிவருகிறது.
இந்தப்பாட்டுக்கு இசைப்பாட்டு பாடுவது போல மனதின் குரல் நிகழ்ச்சியில் பாரதியார் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார், பிரதமர் மோடி. மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் நாட்டுமக்களுக்கு உரையாற்றும் மோடி அந்த உரையில், 'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்' என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்தியாவின் பன்முகத்தன்மையைக் குறிப்பிடும் விதமாக பாரதி பாடிய இப்பாடலைத் தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் குறிப்பிட்டு உரையாற்றியுள்ளார்.