உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று கடந்த 30 நாள்களாக இந்தியாவில் தீவிரமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இந்த வைரஸ் பெருந்தொற்றால் 23 ஆயிரத்து 97 பேர் பாதிக்கப்பட்டும், இரண்டாயிரத்து 858 பேர் குணமடைந்தும் 721 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே, கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
வைரஸ் பெருந்தொற்று தீவிரமடையும் முன் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கை மே 3ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளில் காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை என அனைத்துத் துறைகளும் ஈடுபட்டுவருகின்றன. நாட்டு மக்களைப் பாதுகாக்கும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி முனைப்புடன் வழிநடத்தி வருகிறார்.
இந்தச் சூழலிலும் ஏப்ரல் 14ஆம் தேதி மக்களுக்கு ‘வயதானவர்களோடு பேசுங்கள் அவர்களின் தனிமையைப் போக்குங்கள்’என அறிவுறுத்தியது போல, தானும் தனது மூத்த சகாக்களின் உடல்நிலையைப் பற்றி கடும் பணி சூழலிலும் தொலைபேசி மூலமாக கேட்டறிந்து வருகிறார்.
தனக்கு உறுதுணையாக, உறவாக இருந்த மூத்த சகாக்களுக்கு நாடு தழுவிய முடக்கத்தாலும், பரவிவரும் கோவிட்-19 தொற்றுநோயாலும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த பிரதமர் மோடி இவ்வாறு தொலைபேசியில் அழைத்து நலம் விசாரிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.