வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஓவைசி," ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோவில் கட்டுமானத்தின் பூமி பூஜையில் அதிகாரபூர்வமாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வது என்பது இந்தியாவின் அரசியலமைப்பு உறுதிமொழியை மீறும் செயலாகும். மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். 400 ஆண்டுகளுக்கும் மேலாக பாபர் மசூதி அங்கே அயோத்தியில் இருந்தது என்பதையும், 1992ஆம் ஆண்டில் அது ஒரு வன்முறை கும்பலால் இடிக்கப்பட்டது என்பதையும் நாம் மறக்க முடியாது" என குறிப்பிட்டுள்ளார்..
அயோத்தி ராமர் கோயிலுக்கு அஸ்திவாரம் போடும் பூமி பூஜை விழாவில் கலந்துகொள்ள வரும் பிரதமர் நரேந்திர மோடி, மூலவர் ராமர் சிலை வைக்கப்பட உள்ள கோயிலின் கருவறைக்குள் கிட்டத்தட்ட 40 கிலோ எடையுள்ள ஒரு வெள்ளி பீடத்தை வைக்கவுள்ளதாக அறிய முடிகிறது.
மதச் சடங்குகளுக்கு வாரணாசியைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள் தலைமை தாங்குவார்கள். இந்து மத வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில் புனித நேரமாகக் கருதப்படும் மதியம் 12.13 மணியளவில் கோயிலின் அஸ்திவாரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கோவிலை புகழ்பெற்ற கட்டடக் கலை வல்லுநர்கள் சோம்புரா சகோதரர்கள் தயாரித்துள்ளனர். ஒரே நேரத்தில் 50 ஆயிரம் பக்தர்கள் வழிபாடு செய்யும் அளவுக்கு இந்த கோயில் வசதிகளைக் கொண்டிருக்கும். சுமார் 85,000 சதுர அடி பரப்பளவில் இக்கோயில் அமைக்கப்பட உள்ளது. இது உலகின் மிகப்பெரிய இந்து கோயில்களில் ஒன்றாக கருதப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.