ஐநாவின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக கவுன்சில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். நியூயார்க் நகரில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற அவர், சூழலுக்கு ஏற்றார்போல் ஐநாவில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "சமகால சூழலை உணர்ந்து ஐநா மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது.
பலதரப்பு உறவை மேற்கொள்வதன் மூலமே நம்மை நாமே நிலைநிறுத்திக் கொள்ள முடியும். சமகால சூழலுக்கு ஏற்ப பல தரப்பு உறவுகள் அமைய வேண்டும். மனித இனத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கு சீர்திருத்தப்பட்ட பல தரப்பு உறவுகளுடனான சீர்திருத்தப்பட்ட ஐநா முக்கியம். ஐநாவின் 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் நாம், அதன் தாக்கத்தை அதிகப்படுத்த உலகளாவிய பலதரப்பு அமைப்பில் சீர்திருத்த மேற்கொள்ள உறுதி ஏற்போம். மனிதர்களை மையப்படுத்திய புதுவிதமான உலகமயமாக்கலை அடிப்படையாக கொண்டு ஐநாவின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.
இரண்டாம் உலக போர் ஏற்படுத்திய தாக்கத்தை குறைக்கும் நோக்கில்தான் ஐநா தோற்றுவிக்கப்பட்டது. அதேபோல், இன்று, கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கத்தை குறைக்கும் வகையில் ஐநாவில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். இந்த வாய்ப்பை இழந்துவிடக் கூடாது. முக்கியமான காலக்கட்டத்தில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.