பிரச்னையை தீர்க்கும் மனநிலையை மாணவர்களிடையே உருவாக்கும் நோக்கில் ஆன்லைன் ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டுவருகிறது. இதன் இறுதிப் போட்டியாளர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, கல்வி அமைப்பை உலக தரத்தில் நவீனமயமாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில் கல்வி தரத்தை மேம்படுத்த கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. நமது கல்வி அமைப்பை உலக தரத்தில் நவீனமயமாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அறிவுத்திறனனுக்கான நூற்றாண்டாக 21ஆம் நூற்றாண்டு விளங்குகிறது. புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, கற்றல் ஆகியவைக்கு இந்த காலத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதையே, புதிய தேசிய கல்வி கொள்கையும் வலியுறுத்துகிறது. 21ஆம் நூற்றாண்டின் இளைஞர்களின் கனவுகளை நினைவில் வைத்தே புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
இக்கொள்கை, பள்ளி பையின் சுமையிலிருந்து விடுபட உதவுகிறது. பள்ளிக் காலத்திற்கு பிறகு உதவாத மனப்பாட முறையிலிருந்து சூழலுக்கு ஏற்ப யோசித்து வாழ்க்கைக்கு உதவும் கற்றல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கல்விக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் மூலம் இந்திய மொழிகள் வளர்ச்சி அடைந்து மேம்படும். இந்தியாவின் அறிவாற்றலை மட்டும் உயர்த்தாமல் இதன் மூலம் ஒற்றுமையும் வளர்க்கப்படும்" என்றார்.
பரந்த சிந்தனையை மாணவர்களிடையே ஊக்குவிப்பதில் ஹேக்கத்தான் போட்டி வெற்றி அடைந்துள்ளது என அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போட்டியில் 42,000 மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். 2019ஆம் ஆண்டு, கலந்து கொள்வோரின் எண்ணிக்கை இரண்டு லட்சமாக உயர்ந்தது. இந்தாண்டு நடைபெற்ற போட்டியில் 4.5 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:திலகரின் துணிச்சல் அனைவருக்கும் உத்வேகம் தருகிறது - மோடி புகழாரம்