கவிஞர் சதீஷ் பிரபு எழுதிய ‘பீச்சாங்கை’ எனும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற, ‘மலம் அள்ளுபவன் கைகளில் எந்தக் கை பீச்சாங்கை’ எனும் வரிகள் படிப்பவர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்களை கண்டுகொள்ளாமல் இந்த பொதுச் சமூகம் எத்தனை காலம் நழுவப் போகிறது.
கொல்கத்தாவில் ஒரு மருத்துவர் தாக்கப்படுகிறார், இந்திய மருத்துவர்கள் சங்கம் அந்த பிரச்னையை பெரிதாக்குகிறது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இந்தியா ஊடகங்கள் பலவற்றிலும் அந்தச் செய்தி பெரிய அளவில் கவனம் பெறுகிறது. ஆனால் 7 துப்புரவுத் தொழிலாளிகளின் மரணம் இந்தியச் சமூகத்தில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அதேபோல் பெரும்பான்மையான ஊடகங்களின் கவனத்தைப் பெறாமல் போகிறது என்றால், இங்கே உயிரின் மதிப்பு எதை வைத்து அளவிடப்படுகிறது.
துப்புரவுத் தொழிலாளர்களின் இழிவு நிலையைப் போக்க சமூக ஆர்வலர்கள் பலரும் போராடி வருகின்றனர். பெஜவாடா வில்சன் அதில் மிக முக்கியமானவர், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்துக்கு எதிராக சஃபை கர்மச்சாரி அந்தோலன் (Safai Karmachari Andolan (SKA) எனும் இயக்கத்தை நிறுவிப் போராடி வருகிறார்.
மலம் அள்ளுபவர்களின் அவலநிலையை உணரக் கொஞ்சமேனும் சிந்தித்தால் போதுமானது. நம் மலத்தை நாம் எந்தவித அருவருப்புமின்றி அள்ளத் துணிவோமா? பின்னர் சக மனிதனை அந்த நிலைக்குத் தள்ளுவது எவ்வளவு மனிதத்தன்மையற்ற செயல் என்பதை உணர வேண்டும். 1993ஆம் ஆண்டு மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளப் பணிப்பது குற்றம் எனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய, மாநில அரசாங்கங்களால் அது சரியான முறையில் நிறைவேற்றப்படவில்லை. பின்னர் பெஜவாடா வில்சனின் ஓயாத போரட்டத்தால், 2013ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் எந்த பயனும் இல்லை, இந்த அவலநிலை இன்னும் தொடருகிறது. இந்த இழி தொழிலைச் செய்யச் சொல்லி சக மனிதனை வதைப்பதில் சாதியத்தின் பங்களிப்பும் உள்ளது.