உலக புகழ்பெற்ற பூரி ஜெகந்நாத் ரத யாத்திரை வருகிற 23ஆம் தேதி நடக்கிறது. இந்த ரத யாத்திரையானது 10 முதல் 12 நாள்கள் வரை நடக்கும். இந்நிலையில் ரத யாத்திரை நடத்த தடை விதிக்கக்கோரி அரசுசாரா தொண்டு நிறுவனமான ஒடிசா விகாஸ் பரிஷத் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், “ரத யாத்திரை திருவிழாவிற்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என்று அரசாங்கத்திற்கு அறிவுறுத்த வேண்டும். கரோனா வைரஸுக்கு மத்தியில் திருவிழாவை நடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவு வரையறுத்துள்ள அடிப்படை உரிமைகளான வாழ்வு, சுதந்திரத்தை மீறும் செயலாகும்.
ஏனெனில் ரத யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். கரோனா நெருக்கடி காலத்தில் இது அவர்களின் உயிருக்கு ஆபத்து மற்றும் தீங்கிழைவிக்கும்” என்று மனுதாரர் கூறியுள்ளார்.
மேலும், “மத்திய அரசின் உத்தரவுகளை மீறி மாநில அரசு ரத யாத்திரை நடத்த கவனம் செலுத்துகிறது என்றும் கடந்த காலங்களில் தப்லிக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டனர்” என்பதையும் மனுவில் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக பூரியில் ரத யாத்திரை தொடர்பாக வெளியான ஊடக அறிக்கையில், “பத்து லட்சம் பக்தர்களுக்கு பத்து ஆயிரம் காவலர்களை நியமிக்க வேண்டும். மேலும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பது சிரமம்” என்று கூறப்பட்டிருந்தது.
ஒடிசா மாநிலம் பூரியில் ஏப்ரலில் ஒருவருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு அறியப்பட்டது. இது மே மாதத்தில் 85 ஆக அதிகரித்தது. தற்போது 108 கரோனா பாதிப்பாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு - உச்ச நீதிமன்றத்தை நாடிய நிறுவனம்!