ஒடிசாவில் பூரி ஜெகந்நாத் வருடாந்திர ரத யாத்திரை ஜூன் 23ஆம் தேதி நடக்கவிருந்தது. இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் ரத யாத்திரை நடத்துவது தனிநபர் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் என்று அரசுசாரா தொண்டு நிறுவனமான ஒடிசா விகாஸ் பரிஷத்என்ற அமைப்பு பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கு தடை விதித்து வியாழக்கிழமை (ஜூன்19) உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில், “கரோனா நெருக்கடிக்கு மத்தியில் ரத யாத்திரை நடந்தால், ஜெகந்நாதர் நம்மை மன்னிக்க மாட்டார்” என்று கூறினார். மேலும் ரத யாத்திரையில் ஏராளமான மக்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தடை உத்தரவு வெளியான மறுதினமே, உச்ச நீதிமன்றத்தில் அப்தாப் ஹோசன் என்பவர் பொதுநல மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையை கண்டிப்பாக நடக்க வேண்டும். பக்தர்கள் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை, கோயில் ஊழியர்கள் ரத யாத்திரையை நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.