தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகளுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மனு!

டெல்லி: வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க மத்திய அரசிற்கும், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கும் உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

By

Published : Dec 8, 2020, 7:10 AM IST

இது தொடர்பாக வழக்கறிஞர் ஜி.எஸ். மணி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனுவில், "மத்திய அரசால் அண்மையில் இயற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 10 நாளுக்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளைப் பரிசீலிக்க மத்திய அரசிற்கும், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கும் உத்தரவிட வேண்டும். விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளான தங்குமிடம், உணவு, குடிநீர், மருத்துவம், சுகாதாரம் போன்றவற்றை ஏற்பாடு செய்துதர வேண்டும்.

போராட்டத்தின்போது விவசாயிகளை மிருகத்தனமாகத் தாக்கிய காவல் துறையினர் மீது மனித உரிமை மீறல் வழக்கைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் திறந்த சந்தை செயல்படுவதில் மத்திய அரசின் கொள்கையைப் பற்றி பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரசு இயந்திரங்கள் முற்றிலும் தோல்வியுற்றன.

வேளாண் திருத்தச்சட்டங்களை இயற்றுவதற்கு முன் நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. சட்டத்தில் எம்.எஸ்.பி.யை நிர்ணயிக்கும் ஏற்பாடு இல்லை, வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றக் குழு பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்படவில்லை. திறந்த சந்தை எந்தவொரு அரசாங்க கட்டுப்பாடும் இல்லாமல், பெருமுதலாளிகளுக்குச் சதகமாக அமையும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள்.

சக விவசாயிகளின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் கடுமையான அச்சுறுத்தல் நீடிக்கிறது. விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் மத்திய அரசு மெளனமாக இருக்கிறது. இதன்காரணமாக, சரிசெய்ய முடியாத இழப்பிற்கு அப்பாவி விவசாயிகள் ஆளாக நேரிடும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அதானிகளுக்கும், அம்பானிகளுக்குமான வேளாண் சட்டம் - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details