பிளாஸ்டிக் பயன்பாட்டை பெரியளவில் குறைக்க வேண்டுமென அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. அதுவும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உலகுக்கே அச்சுறுத்தலாக இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளபோதிலும், வணிகர்களும், மக்களும் அதற்கு போதிய ஒத்துழைப்பு தராததால், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில், பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மையை மேம்படுத்துவதே ஒரே வழி என்று உணர்ந்த சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி, பிளாஸ்டிக் கழிவுகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடிவுசெய்தது. கழிவுகளாக எறியப்படும் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்டவற்றை தூள் தூளாக்குகின்றனர்.
தூளாக்கப்பட்ட பிளாஸ்டிக்குகள் கான்கிரீட், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களுடன் கலக்கப்படுகிறது. அவற்றிலிருந்து மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வடிவமைத்து அசத்துகின்றனர். இதேபோல், பிளாஸ்டிக் பைகள் எரிக்கப்பட்டு தார், சாம்பல் போன்ற பொருள்களுடன் கலக்கப்பட்டு கட்டுமான பொருள்களாக மாற்றப்படுகின்றன.