தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செங்கற்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் குப்பிகள் - வியக்கவைக்கும் மஜூலி அங்கன்வாடி மையங்கள்! - அசாம் மாநிலத்தின் மஜூலி

மஜூலி மாவட்ட துணை ஆணையர் பிக்ரம் கைரியால் தொடங்கப்பட்ட 'கிஷாலயா' எனும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அம்மாவட்ட நிர்வாகம் 100 அங்கன்வாடி மையங்களைத் தேர்வு செய்து, செங்கற்களுக்கு பதிலாக ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பிகளை உபயோகித்து கட்டுமானங்களை எழுப்பவுள்ளது.

அசாம் செய்திகள்
செங்கற்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் குப்பிகளால் கட்டப்படும் மஜூலி மாவட்ட அங்கன்வாடி மையங்கள்

By

Published : Jan 28, 2020, 6:08 PM IST

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான வழிகள் தொடர்ந்து கண்டறியப்பட்டுவரும் நிலையில், அசாம் மாநிலத்தின் மஜூலி மாவட்டத்தின் அங்கன்வாடி மையங்கள் மற்றும் கிராமப்புற குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் கட்டுமானப் பணிகளில் புதுவித முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மஜூலி மாவட்டத் துணை ஆணையர் பிக்ரம் கைரி யால் தொடங்கப்பட்ட 'கிஷாலயா' எனும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அம்மாவட்ட நிர்வாகம் 100 அங்கன்வாடி மையங்களைத் தேர்வு செய்து, செங்கற்களுக்கு பதிலாக ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பிகளை உபயோகித்து கட்டுமானங்கள் எழுப்பவுள்ளது.

செங்கற்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் குப்பிகளால் கட்டப்படும் மஜூலி மாவட்ட அங்கன்வாடி மையங்கள்

”இந்தத் திட்டம் குறித்து நான் மகிழ்ச்சியாக உணருகிறேன். அசாமில் இத்தகைய கட்டுமானத் திட்டத்தின்கீழ் இது முதல் முயற்சி என்றாலும், முன்னதாக இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மார்கெரிட்டாவில் ஜெனரேட்டர்கள் வைப்பதற்காகக் கொட்டகை ஒன்றை நாங்கள் எழுப்பியிருந்தோம். இந்த கொட்டகை இன்னும் அப்படியே நல்ல நிலையில் உள்ளது” என அம்மாவட்ட துணை ஆணையர் கைரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இதுபோன்ற கட்டுமானங்கள் ஃபிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் எழுப்பட்டுள்ளதை நாம் இதற்குமுன் கண்டுள்ளோம். இந்தியாவில், கர்நாடகாவும், பிற தென்னிந்திய மாநிலங்களும் இந்தத் தொழில்நுட்பத்தை முன்னதாக பயன்படுத்தியுள்ளன. எனவே அசாமிலும் இந்த முயற்சியை மேற்கொள்ள முயன்று, மஜூலியில் இந்த வேலைகளைத் தொடங்கினோம். தற்போது நாங்கள் 20,000 பாட்டில்களைப் பயன்படுத்தவுள்ளோம்” என்றும் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய ஆற்றுத்தீவுப் பகுதியான, ககோரிகோட்டா பபனா கிராமத்திலுள்ள, சிலகலா காவ் பஞ்சாயத்தின் கீழ், 80,000 ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தின் மூலம் முதல் அங்கன்வாடி மையமானது அமைக்கப்படவுள்ளது. கடந்த டிசம்பர் 25, 2019 இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

முதல் கட்டமாக 45 அங்கன்வாடி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு மையங்களின் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன.

இந்த புதிய முயற்சியினை பாராட்டும் அதே நேரத்தில், பிரம்மபுத்திரா தீவுகளிலுள்ள உள்ளூர்வாசிகளும் இந்தத் திட்டத்தில் தங்கள் பங்களிப்பை ஆற்றிவருகின்றனர்.

பிளாஸ்டிக் கழிவுகளைத் தூக்கி எறிவதற்கு பதிலாக, அதை சேகரித்து இதுபோன்ற சரியான முறையில் பயன்படுத்தினால், மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதோடு, இதுபோன்ற கட்டுமானங்களையும் எழுப்பலாம் என அந்த கிராம உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.

இந்தக் கட்டுமானப் பணிகளுக்கு லட்சக்கணக்கான ஒரு முறைப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பிகள் தேவைப்படும் நிலையில், மேற்கு ககோரிகோட்டா இந்திரா மகளிர் சங்கம் மற்றும் கிராம சுய உதவிக்குழுக்களுக்கும் கட்டுமான வேலைகளுக்கான மூல பிளாஸ்டிக் குப்பிகளை சேகரிக்கும் பணிகள் வழங்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் பாட்டில் கொடு - தேநீரை தருகிறோம்!

ABOUT THE AUTHOR

...view details