கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி, வருவாய்த் துறை உதவி செயலாளர் பி. முரளிகிருஷ்ணா ராவ் என்பவர், குண்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், "ஆந்திரா முதலமைச்சர் நிதியிலிருந்து 117 கோடி ரூபாயை சுருட்ட போலி காசோலையை உபயோகித்து கர்நாடகா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள வங்கிகளில் அடையாளம் தெரியாத கும்பல் சிலர் முயற்சி செய்துள்ளனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
கிடைத்த தகவலின்படி, 16 ஆயிரம் ரூபாய், 45 ஆயிரம் ரூபாய்க்கான இரண்டு காசோலையை மூன்று நபர்களுக்கு வருவாய்த் துறை வழங்கியுள்ளது. ஆனால், அவர்கள் அந்தக் காசோலையின் எண்ணைப் பயன்படுத்தி போலி காசோலையை கோடி கணக்கான ரூபாய் எடுக்கும் வகையில் தயாரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இவ்வழக்கின் முக்கியத்துவத்தை அறிந்த ஆந்திர அரசு, இவ்விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த நகர ஊழல் துப்பறியும் படைக்கு (ஏசிபி) உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஏசிபி படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஆறு பேரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.