கடந்த 70 நாள்களுக்குள் பசியினால் உயிரிழக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவந்தது. குடிபெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்வே நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் கேட்பாரற்றுக் கிடந்தனர். பிகாரின் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் ஒரு சங்கு பால் கூட கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் 4 மாத குழந்தைக்கு ரயில்வே காவலர் ஒருவர் பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷெரீப் ஹாஷ்மி, ஹசீன் ஹாஷ்மி தம்பதியினர் தனது 4 மாத குழந்தையுடன் பெல்காமில் இருந்து கோரக்பூர் செல்லும் ஷிராமிக் சிறப்பு ரயிலில் சென்றுகொண்டிருந்தனர். ரயில் பயணத்துக்கிடையில் அவரது குழந்தை பசியால் அழுதது. முந்தைய நிலையத்திலும் குழந்தைக்கு பால் கிடைக்கவில்லை. இதனால், தங்களின் நிலையை எடுத்துக் கூறி போபால் நிலையத்தில் இருந்த ரயில்வே கான்ஸ்டபிள் இந்தர் சிங் யாதவிடம் உதவி கேட்டுள்ளனர்.