கோழிக்கோடு: முதலமைச்சர் பினராயி விஜயனும், தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட செயலாளர் எம்.சிவசங்கரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருவதாகவும், மாநிலத்தை உலுக்கிய வழக்குகளில் ஒருவருக்கொருவர் காப்பாற்ற முயற்சிப்பதாகவும், காங்கிரஸ் தரப்பு திங்கள்கிழமை (அக்.19) குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, “சிவசங்கரின் செயலை விஜயன் கண்டிக்கவில்லை, தற்போது அவர் பல நாள்களாக பல்வேறு தேசிய விசாரணை அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
சிவசங்கரின் செயலை ஜி.சுதாகரன் மற்றும் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகிய இரு அமைச்சர்கள் அமைச்சரவையில் பகிரங்கமாக கண்டனம் செய்திருந்தாலும், சிவசங்கரைப் பற்றி முதலமைச்சர் விஜயன் இன்னும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
அதேபோல் சிவசங்கரின் வாக்குமூலத்தில் விஜயனைப் பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. முதலில், குற்றச்சாட்டுகள் வந்தபோது, விஜயன் தான் விசாரணையை கேட்டார்.
அந்த விசாரணை விரிவடைந்ததும், அதன் வெப்பத்தை உணரத் தொடங்கினார். விஜயனின் அறிவுக்கு எட்டாமல், சிவசங்கர் இதையெல்லாம் செய்திருப்பார் என்று யாரும் நம்ப மாட்டார்கள்.