ராஜஸ்தானில் 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதே முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் முட்டலும் மோதலுமாகவே நீடித்து வந்தது.
ராஜஸ்தானில் நடக்கும் தவறுகளை சச்சின் பைலட் சுட்டிக்காட்டி வந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்தச் சம்பவம் சச்சின் பைலட்டுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் தனது எதிர்ப்பை நேரடியாக காட்டி வருகிறார். இந்நிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட் தனது இல்லத்தில் எம்எல்ஏக்களை கூட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும், டெல்லி சென்றிருந்த சச்சின் பைலட் தனக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவாக இருப்பதாக தெரிவித்த செய்தி காட்டூத்தீ போல் பரவியது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த தனது அரசியல் நண்பரான ஜோதிராதித்யா சிந்தியாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.
அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இல்லத்தில் சுமார் 75 எம்எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். ஆனால், இந்தக் கூட்டத்தில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை.