கரோனா பெருந்தொற்றால், 10 கோடி பேர் தங்களது வேலையை இழந்துள்ளதாகவும், 40 கோடி குடும்பங்கள் வாழ்வாதாரப் பிரச்னையை எதிர்கொண்டுள்ளதாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழ் சாம்னா கட்டுரை வெளியிட்டுள்ளது.
சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் எழுதிய அந்தக் கட்டுரையில், மாத வருமானத்தை மட்டும் நம்பியிருக்கும் நடுத்தர வர்க்க குடும்பங்கள் வேலைகளை இழந்துள்ளதாகவும், வர்த்தகத் துறையில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "நம்பிக்கை மற்றும் உறுதியின் அடிப்படையில் மக்கள் தங்களது வாழ்க்கையை வாழமுடியாது. இதுவரை இல்லாதளவு மக்கள் பாதுகாப்பின்மையை உணருகின்றனர். இஸ்ரேலில் கரோனாவை எதிர்கொள்ள சரியான முடிவுகளை எடுக்காத அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலகவேண்டுமென அந்நாட்டு மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதேநிலையை இந்திய பிரதமரும் காணக்கூடும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வரும்போது, அம்பலா விமானப்படை நிலையத்தைச் சுற்றிய பகுதிகளுக்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டிய சஞ்சாய் ராவத், இதற்கு முன்னதாக சுகோய், மிக் விமானங்கள் இந்தியாவுக்கு வரும்போது இத்தகைய கொண்டாட்டங்கள் இல்லை. ஆயுதங்களை ஏந்திச்செல்லக்கூடிய ரபேல் விமானம், பொருளாதாரப் பிரச்னைகளையும், வேலையின்மையும் சுட்டு வீழ்த்திவிடுமோ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க:நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் வேலையின்மை